டிசம்பர் 19, பெஷாவர் ராணுவப்பள்ளி தாக்குதல் நடத்திய பின்னர், அடுத்த கட்ட தாக்குதல் நடத்துவதுகுறித்து, தங்களது தலைவனிடம் தீவிரவாதிகள் பேசியிருப்பதால், மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆடிட்டோரியத்தில் இருந்த அனைத்து குழந்தைகளையும் கொன்று விட்டோம். அடுத்ததாக நாங்கள் என்ன செய்ய வேண்டும்“ என்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அவர்களுடைய தலைவனிடம் பேசியுள்ளார்கள். அதற்கு, “ராணுவத்தினர் வரும் வரை காத்திருங்கள். வந்த பின்னர் அவர்களை கொன்று விடுங்கள்“ என்று தலைவன் கூறியுள்ளான். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ராணுவப்பள்ளி தாக்குதலில் தொடர்புடையதாக, தலிபான் தலைவர் முல்லா பஸ்லுல்லா, துணைத் தலைவர் காகித் ஹக்கானி உட்பட 14 முக்கிய தளபதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனை, மச்னி கேட் போலீசார் மேற்கொண்டனர். தாக்குதல் நடத்துவதற்கு, பயன்படுத்தப்பட்ட வாகனம் அடையாளம் காணப்பட்டு, அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.