டிசம்பர் 10, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கையில் இருந்து சிறப்பு விமானத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அவரை சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த் ஜெயின், திருப்பதி எஸ்பி கோபிநாத் ஜெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலை கழகத்திற்கு உட்பட்ட தாரக்கராமா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஹெலிபேடில் வந்திறங்கினார். அங்கிருந்து கார் மூலம் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், வேத பல்கலைக்கழகம் வழியாக அலிபிரி சென்று, திருப்பதி 2 வது மலைபாதை வழியாக திருமலை பத்மாவதி நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு வந்தார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவை யில் ராஜபக்சே சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் காலை 8.15 மணிக்கு திருமலையில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையம் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் 10 மணிக்கு கொழும்பு செல்கிறார். ராஜபக்சே வருகையையொட்டி, திருப்பதி ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சுப்ரபாத சேவையில் முக்கிய பிரமுகர்கள் மட்டும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் நேற்று நடைபெற இருந்த அங்கபிரதட்சனை சேவை ரத்து செய்யப்பட்டது.