டிசம்பர் 8, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு வழக்கின் ஆவணங்கள் பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக 3 லட்சத்து 60 ஆயிரம் பக்க ஆவணங்கள் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தும் பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அப்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டு ஆவணங்களை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, கர்நாடக ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) ஜெயலலிதா சார்பில் மேல்முறையீட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. கடந்த 2 மாதங்களாக ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருடைய மூத்த வக்கீல் குமார், வக்கீல்கள் செந்தில், அசோகன், ஆர்.அன்புக்கரசு, திவாகர், செல்வக்குமார் உள்ளிட்ட வக்கீல்கள் குழு மேல்முறையீட்டு வழக்கு குறித்த ஆவணங்களை நகல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
3 லட்சத்து 60 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் புத்தக வடிவில் தயாரிக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த ஆவணங்களை எல்லாம் பெங்களூர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்வதற்காக நேற்று இரவு வக்கீல்கள் சென்னை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணம் என்பதால் இன்று (திங்கட்கிழமை) காலையில் பெங்களூர் ஐகோர்ட்டில் உள்ள பதிவுத்துறையில் தாக்கல் செய்யப்படும். பதிவுத்துறை அதிகாரிகள் அவற்றை சரிபார்த்து அந்த ஆவணங்களுக்கு எண்கள் வழங்க ஒன்று அல்லது 2 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே வருகிற 17-ந்தேதி முதல் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கப்படும் என்று தெரிகிறது.