நவம்பர் 29, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், தொடக்கத்தில் தங்கம் இறக்குமதி குறைந்தபோதிலும், கடந்த ஏப்ரல் மாதம், கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டதால், தங்கம் இறக்குமதி அதிகரித்தது. கடந்த மாதம், தங்கம் இறக்குமதி 285 சதவீதமாக அதிகரித்தது. இதையடுத்து, தங்கம் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சந்தையில் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், அதற்கு மாறாக, தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நேற்று நீக்கின. தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, 80 சதவீத தங்கத்தை வைத்துக்கொண்டு, 20 சதவீத தங்கத்தை கண்டிப்பாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் ரத்து செய்தன. இதுதொடர்பாக அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
இதற்கு தங்கம் வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி அகில இந்திய நகை வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஹரீஷ் சோனி கூறியதாவது:–
உலக சந்தைகளில் தங்கத்தின் ஒட்டுமொத்த தேவை குறைந்து வருகிறது. அத்துடன், தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால், தங்கம் விலை மேலும் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.