நவம்பர் 20 அண்மையில் கேமரன் மலையில் ஏற்பட்ட சகதி வெள்ளத்தைப் பார்வையிட்ட பகாங் மாநில சுல்தான் அஹ்மாட் ஷா அபு பாக்கார், கேமரன் மலையில் நடந்துக்கொண்டிருக்கும் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என அவர் பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் இதைக்குறித்து சுல்தானிடம் பேசவுள்ளார்.
தற்போது அங்கு ஏற்பட்டிருக்கும் சகதி வெள்ளம் மற்றும் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக பகாங் சுல்தானிடம் அவர் விளக்கமளிக்கவிருப்பதாக அவர் கூறினார்.
அங்குள்ள மக்களின் பொது நலத்தை கருத்தில் கொண்டு பகாங் சுல்தான் இம்மாதிரியான கட்டளையைப் பிறப்பித்து இருப்பதாகவும் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த வெள்ளத்தினால் சுமார் 5 பேர் பலியாகியிருப்பதாகவும் ஜி. பழனிவேல் மேலும் கூறினார்.
இந்நிலையில், பெர்த்தாம் பள்ளத்தாக்கில் நிகழ்ந்திருக்கும் வெள்ளப்பேரிடருக்கு நிவாரண தொகையாக RM 40 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கபட்ட 75 குடும்பங்களுக்கு தலா 1000 ரிங்கிட் நன்கொடையாகவும் வழங்கப்பட்டுள்ளது என ஜி. பழனிவேல் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த கேமரன் மலை வெள்ளப்பேரிடர் மற்றும் சட்டவிரோத விவசாய நடவடிக்கையைக் குறித்து பேசப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தாம் விரைவில் பகாங் சுல்தானிடம் விளக்கமளிக்கவுள்ளதாகவும் அனைவரும் ஒன்று சேர்ந்து கேமரன் மலையைக் காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் ஜி. பழனிவேல் கேட்டுக்கொண்டார்.