நவம்பர் 19, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் இந்த வருடமாவது போதிய அளவுக்கு பெய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். மக்கள் எதிர்பார்த்தபடி வடகிழக்கு பருவமழை இதுவரை அநேக இடங்களில் பெய்தது. அதனால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்ததாவது:-
சராசரியாக வடகிழக்கு பருவ காலத்தில் அதாவது அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை தமிழ்நாட்டில் 44 செ.மீ. மழை சராசரியாக பெய்ய வேண்டும். இதுவரை 32 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 73 சதவீதம் ஆகும். இன்னும் வடகிழக்கு பருவமழை காலம் உள்ளது.
இன்னும் 27 சதவீத மழை பெய்தால் சராசரி மழை பெய்ததாக அர்த்தம். அதாவது இன்னும் 12 செ.மீ.மழை பெய்ய வேண்டும். எனவே இன்னும் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்ய வேண்டும். அவ்வாறு பெய்தால் தான் சராசரி அளவை எட்டும். இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்றார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலும், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியிலும் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கீழ் கோதையாறு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.