பொருளாதார சீர்த்திருத்தங்கள் மக்களுக்கு சுமையாகக் கூடாது : மோடி பேச்சு

பொருளாதார சீர்த்திருத்தங்கள் மக்களுக்கு சுமையாகக் கூடாது : மோடி பேச்சு

modi

நவம்பர் 16, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும். அதே நேரத்தில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டதாக அது இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆஸ்திரேயாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார் மோடி. மாநாட்டுக்கு முன்னதாக உலகின் மிகவும் வலுவான பொருளாதாரம், தொழில் வளர்ச்சி கண்டுள்ள இந்த 20 நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்கு ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஏற்பாடு செய்திருந்தார். இதில் உதவியாளர்கள் இல்லாமல், 20 நாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேசினர்.

அபோட் வேண்டுகோளை ஏற்று, பொருளாதார சீர்திருத்தம் குறித்து இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது: பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும். அதை தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டதாக அது இருக்க வேண்டும். அரசின் கடமை யாக இதை நினைக்காமல், மக்களுக்காக, மக்களால் நடத்தப்படுவதாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது. இந்த சீர்திருத்தங்கள், ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை எளிமையாக்கக் கூடியதாகவும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேயை சந்தித்துப் பேசினார் மோடி. அப்போது, தீவிரவாதத்துக்கு எதிராக உலக அளவில் பொதுவான செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.