32 பேர் அடங்கிய இளைஞர் படையுடன் கேமரன் மலையில் இன்று 12-11-2014 ம.இ.கா இளைஞர் பிரிவு களம் இறங்கியது. மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்துக் கொடுப்பதற்கும், உடைமைகளை தூக்கி இறக்கி கொடுப்பதற்கும் ம.இ.கா இளைஞர் பிரிவினர் உதவி புரிந்தனர். காலை 10 மணிக்கு துவங்கிய இத்துப்புறவு பணிகள் மாலை 5 மணி வரை நீடித்தது. தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன், இளைஞர் படைத்தலைவர்களுடன் இறங்கி ஒவ்வொரு வீடாக சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்தார்.
”இங்கு விவசாயம் மேற்கொள்பவர்கள்தான் இந்த நாசத்திற்கு காரணம் என்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில், விவசாயம் செய்யும் தரப்பினர் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை வழங்க முன்வரவேண்டும். அதே சமயம் அரசாங்கம் வழங்கிய 40 லட்சம் ஒதுக்கீட்டை வைத்து கூடிய விரைவில் கேமரன் மலையில் தடைபட்டிருக்கும் அனைத்து மேம்பாட்டு திட்டங்களையும் நிறைவேற்றாவிட்டால் கேமரன் மலையில் மண் சரிவும் காட்டாற்று வெள்ளமும் தொடர்கதையாகிவிடும். அதுமட்டுமின்றி கேமரன் மலையில் இருந்துவரும் புறம்போக்கு விவசாயத்தை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும் “ என சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.
மேலும் தங்களது வீடுகளை இழந்து இன்னும் 4 குடும்பங்கள் பரிதாபமாக சமூகநல மண்டபத்தில் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு வீடுகளை ஏற்பாடு செய்து கொடுக்க ம.இ.கா பகாங் மாநில தலைவர் செனட்டர் டத்தோ குணசேகரன் அவ்விடத்தின் பெங்குலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் வீடுகளை பெற்றுக் கொடுப்பதாக வாக்களித்துள்ளார். இந்த 4 குடும்பங்களுக்கும் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் தனது சார்பாக ஒரு கணிசமாக தொகையை நன்கொடையாக வழங்கினார்.
இவ்வாறு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவுப் பத்திரிக்கை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.