நவம்பர் 7, நவீன ஸ்மார்ட் போன்களால் தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் ‘செல்பி’ புகைப்பட மோகம் தற்போது இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது. ஒரு நபர் மட்டுமின்றி, நண்பர்கள், குடும்பத்தினர் என ஒன்றுக்கு மேற்பட்டோரும் இணைந்து இவ்வாறு செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.
இங்கிலாந்தின் நியூகாஸ்டில் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் 2 பேர் இணைந்து லண்டனில் உள்ள ஒரு மது பாரில், ‘பெண்களின் இரவை’ கொண்டாடினர். பார்ட்டியை முடித்துக்கொண்ட அவர்கள், தங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய நினைத்தனர். அதன்படி விக்டோரியா கிரீவ்ஸ், கெய்லே அட்கின்சன் ஆகிய அந்த 2 இளம்பெண்களும், செல்போனில் தங்களை செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் செல்போனில் பதிவாகிய அந்த புகைப்படத்தை பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த புகைப்படத்தில், தங்களின் பின்னால் ஒரு வயதான பெண் விக்டோரிய உடையில் காணப்பட்டார். ஆனால் சம்பவத்தின் போது அங்கே, அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லாததால், செல்பி புகைப்படத்தில் தெரியும் அந்த பேய் உருவத்தை பார்த்து இருவரும் கதிகலங்கியுள்ளனர். எனினும் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த அவர்கள், தங்கள் போனில் இருந்து அந்த புகைப்படத்தை அழித்து விட்டனர்.