''தீயா வேலை செய்யனும் குமாரு''-க்கு பிறகு சித்தார்த் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருககும் படம்தான் ஜிகர்தண்டா. காரணம், இந்த படத்தில் மதுரை மண்வாசனைக்கதையில் முதன்முறையாக அவர் ஆக்சன் கோதாவில் இறங்கியிருக்கிறார். அதோடு, பீட்சாவை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் என்பதால் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், படத்தை முடித்து சென்சார் போர்டுக்கு அனுப்பினால், ரத்தம் வழிந்தோடும் வன்முறைக் காட்சிகள் இருப்பதை காரணம் காட்டி யு/ஏ சான்றிதழ் கொடுத்து விட்டனர். இதையடுத்து அப்படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க முன்வந்த விநியோகஸ்தர்களோ, டிக்கெட் விலையில் 30 சதவிகிதம் அரசுக்கு சென்று விடும் என்பதால், ஏற்கனவே பேசிய தொகையில் இருந்து ஒரு கணிசமான தொகையை குறைப்பதாக சொல்கிறார்களாம்.
இதனால், சென்சார்போர்டு சொல்லும் காட்சிகளை நீக்கினால் யு சான்றிதழ் கிடைக்கும். விநியோகஸ்தர்களும் பேசிய தொகையை தந்து விடுவார்கள். பிரச்னை முடிந்து விடும் என்று தயாரிப்பு தரப்பு கூறினாலும், டைரக்டர் மறுக்கிறாராம். அந்த காட்சிகளில்தான் கதையின் ஜீவனே இருக்கிறது. அதை நீக்கினால் படமே இல்லையே,. அப்புறம் எப்படி படம் ஓடும் என்று வாக்குவாதம் செய்கிறாராம்.
இதன்காரணமாகத்தான் கடந்த 5 மாதங்களாக இதோ அதோ என்று ஜிகர்தண்டா திரைக்கு வருவது தாமதமாகிக்கொண்டு வருகிறதாம். அதனால், இதுவரை காவியத்தலைவன் பட வேலைகளில் பிசியாக இருந்த சித்தார்த், இப்போது இறங்கி வந்து அப்பட டைரக்டர்-தயாரிப்பாளர் இருவரிடமும் சுமூகமாக பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.