தெஹ்ரான்: அணு ஆயுத விவகாரத்தில் இஸ்ரேல் மிக மோசமாக நடந்து கொள்வதைப் போலவும் அமெரிக்கா அதைத் தடுப்பது போலவும் நாடகமாடுகின்றன என்று ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி சாடியுள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது என்ற விவகாரத்தில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் அடம்பிடித்தது. ஆனால் அமெரிக்காவோ பொறுமை காத்து கடைசியில் பொருளாதாரத் தடை விதித்து வந்தது.
தற்போது ஈராக் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை முதலில் விரும்பினாலும் பின்னர் அதை ஈரான் கடுமையாக எதிர்த்தது. இந்த நிலையில் அந்நாட்டில் நடைபெற்ற ரம்ஜான் இப்தார் விழாவில் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி பேசியதாவது: இஸ்ரேல் ஈரானைத் தாக்க முயல்வது போல நடிக்கிறது. அமெரிக்காவோ அதை தடுப்பது போல மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். ஆனால் தாக்குதல் நடத்துவதற்கு மிகப்பெரும் செலவாகும் என்பதாலேயே இருவருமே ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை. பின்னர் வேறுவழியில்லாமல் பொருளாதார தடை என்ற ஆயுதத்தை கையில் தூக்கியுள்ளன. இவ்வாறு அயத்துல்லா கொமேனி பேசியுள்ளார்.