நவம்பர் 3, நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குடிநீர் ஏரி பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்து இருக்கிறது.
புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்து இருக்கிறது. செம்பரம்பாக்கம் பகுதியில் 10 மி.மீ மழை பெய்துள்ளது. தாமரைப்பாக்கத்தில் 9 மி.மீ, கொடுங்கையூரில் 6 மி.மீ மழை பெய்திருக்கிறது.
செங்குன்றம் புழல் ஏரியின் மொத்த உயரம் 20.21 அடி. இன்றைய நீர்மட்டம் 8.01 அடியாக உள்ளது. தற்போது 1001 மில்லியன் கன அடி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. மழை நீர் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து 241 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியின் நீர் மட்டம் இன்று காலை 20.28 அடியாக இருந்தது. மொத்த உயரம் 35 அடி. கொள்ளளவு 322 மில்லியன் கன அடி. தற்போது 227 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா கால்வாய் நீரை பயன்படுத்துவதால் நீர்வரத்து 158 கன அடியாக குறைந்தது. இன்று நீரையும் சேர்த்து பூண்டி ஏரிக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இன்றைய நீர் மட்டம் 13.17 அடி. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இப்போது 1213 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 86 கன அடி வீதம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
வீராணம் ஏரி நிரம்பி உள்ளது. இங்கிருந்து குடிநீர் வினியோகத்துக்காக வழக்கம் போல் சென்னைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.