தங்கச்சிமடத்தில் சேதப்படுத்தப்பட்ட தண்டவாளம் சீரமைப்பு

தங்கச்சிமடத்தில் சேதப்படுத்தப்பட்ட தண்டவாளம் சீரமைப்பு

TQAS20140205B-014_C

அக்டோபர் 31, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டதால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது தகர்க்கப்பட்ட தண்டவாளம் சீரமைக்கப்பட்டுள்ளதையடுத்து ரயில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே அசம்பாவிதங்களை தவிர்க்க தங்கச்சிமடம் பகுதியில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்ற தீர்ப்பால் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த ஆவேசமடைந்தனர். இதனால் தங்கச்சிமடத்தை சற்றி சுமார் 4 கி.மீ தூரத்திற்கு மீனவர்கள் தங்களது தீவிர எதிர்ப்பை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தினர். மேலும் கற்கள், மரங்கள் உள்ளிட்டவற்றால் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று நள்ளிரவு மீனவர்கள் தீவிர போராட்டம் நடத்தியதன் விளைவாக போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதன் ஒரு பகுதியாக தங்கச்சிமடம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளம் பெயர்த்து எடுக்கப்பட்டதால் 200 மீட்டர் அளவில் தண்டவாளம் நகர்த்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை, குமரி செல்ல வேண்டிய 3 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ரயில்வே தண்டவாளங்களில் இருந்த மரக்கட்டைகள், தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த தண்டவாளங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை ரயில்வே ஊழியர்கள் செய்தனர். ரயில் வெள்ளோட்டத்திற்கு பிறகு இன்று மாலையோ அல்லது இரவோ ரயில் போக்குவரத்து துவங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் முயற்சியால் தற்போது அமைதியான சூழல் நிலவினாலும் மீண்டும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.