அக்டோபர், 29, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள 600 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது. கறுப்பு பணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவருடைய பெயர் பட்டியலையும் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இதனையடுத்து பட்டியலில் உள்ள அனைவரது பெயரையும் வெளியிடுவதில் மத்திய அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவரையும் பாதுகாக்க நினைக்கவில்லை என்றும் கூறினார். இவ்விவகாரத்தில் உண்மையை வெளிகொண்டு வர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்றும், குற்றம் புரிந்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேரின் பெயர் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்கிறது. அந்தப் பட்டியலை வெளியிடுவதா, வேண்டாமா என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.