அக்டோபர், 29, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் (வயது 49). இவர் மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன், இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வந்தார். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர்.
தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று, அவர்களது வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே ஜதீந்திர லாட், மனைவி, மகள்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது
கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி, மகள்களை கொலை செய்துவிட்டு, ஜதீந்திர லாட் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம், சம்பவம் நடந்து இரண்டு, மூன்று தினங்கள் ஆகி இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2 லட்சத்து 35 ஆயிரம் பவுண்ட் (சுமார் ரூ.2 கோடியே 35 லட்சம்) மதிப்புள்ள ஜதீந்திர லாட் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் வல்லுனர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த கிராமத்திற்கு ஜதீந்திர லாட் 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாகவும், 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டில் குடியேறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜதீந்திர லாடின் மூத்த மகள் திரிஷாவை அறிந்த இந்திய வாலிபர் சேஹஜ் சிங், “திரிஷாவை நான் 8 வருடங்களாக அறிவேன். அவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் அருமையான பெண். தனது குடும்பத்தினரைப் பற்றி எந்த தவறான தகவலையும் அவர் கூறியது இல்லை” என்று தெரிவித்தார்.
மேற்கு யார்க்ஷைர் போலீஸ் சூப்பிரண்டு சைமன் ஆட்கின்சன், “இப்போது வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. நால்வரும் எப்படி இறந்தார்கள் என்று யூகிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை” என கூறினார்.