கோலாலம்பூர், 16 நவம்பர் 2026 : நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் நிலை குறித்து இதுவரை தெளிவான பதில் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலையீட்டைக் கோரியுள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்து 82 நாட்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களின் நிலை மற்றும் அவர்களின் குடும்பங்களைப் பாதிக்கக்கூடிய சட்ட, நிர்வாக நடைமுறைகள் குறித்து இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை என மலேசிய ஒற்றுமைக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் (MASFIH) அமைப்பின் பேச்சாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சுடன் நேரடிச் சந்திப்பு நடத்தப் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை தேதி உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், காத்மாண்டுவிலுள்ள மலேசியத் தூதரகம் வழியாகக் குடும்பத்தினர் தனித்தனியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதன் காரணம் மற்றும் அதன் சட்ட அடிப்படை குறித்தும் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.
நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA), நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் காணாமல் போன 171 வெளிநாட்டவர்களில் 54 மலேசியர்களும் இடம்பெற்றிருந்தனர். இது சரிபார்ப்பு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் நடைமுறையின் ஒரு பகுதியே தவிர, இறுதி முடிவு அல்ல எனக் குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட நடைமுறைகள் மலேசியாவில் எவ்வாறு அங்கீகரிக்கப்படும், குடும்பத்தினர் தனியாக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா, இதற்கான சட்ட அடிப்படை என்ன என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
அடுத்த சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட மூத்த அதிகாரி பங்கேற்க வேண்டும் என்றும், தேசியப் பதிவுத் துறை (JPN) மற்றும் சட்டத்துறைத் தலைமை அலுவலகத்தின் (AGC) பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்றும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
காணாமல் போன 54 பேரும் இதுவரை அதிகாரப்பூர்வமாகக் காணாமல் போனவர்களாகவே உள்ளனர்; அவர்களின் மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் டாக்டர் மணிவண்ணன் தெளிவுபடுத்தினார். அரசாங்கம் சட்ட நடைமுறைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது தங்களது கோரிக்கையல்ல என்றும், வெளிப்படைத்தன்மை, தெளிவான பதில்கள், ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகியவற்றையே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







