என் தமிழ்

தீபாவளி வர்த்தகக் கண்காட்சி : 5 இலட்சம் பார்வையாளர்களை ஈர்க்க இலக்கு ; வணிகர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

கோலாலம்பூர், 02 நவம்பர் 2026 : மலேசியாவில் நடைபெற்று வரும் 24-வது தீபாவளி வர்த்தகக் கண்காட்சி (Deepavali Carnival 2026), இவ்வாண்டு 5 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்குடன் நடைபெறுகிறது. அதேவேளையில், உள்ளூர் தொழில்முனைவோர் தங்களது வணிக வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் இக்கண்காட்சி ஊக்குவித்து வருகிறது.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனைத் தெரிவித்தார். உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமெடுத்து வரும் நிலையில், வணிகர்கள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றும், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்காலத்தில் இக்கண்காட்சியை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் ஸ்ரீ சோமநாத் கோஷ் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜா ஆர். ஜோர்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள Agenda Suria Communication Sdn. Bhd. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜக் ராவ் சிமான்சா பேசுகையில், இக்கண்காட்சி ஆசியான் பிராந்தியத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு நிகழ்வுகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்குவதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சிக்கு சுமார் 3.6 இலட்சம் பார்வையாளர்கள் வந்ததாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாண்டு கண்காட்சியின் முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் 80,000 பேர் வருகை தந்துள்ளதாகக் கூறினார். இதனால், இவ்வாண்டு 5 இலட்சம் பார்வையாளர்கள் என்ற இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

450-க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்கள்

ஒன்பது நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தீபாவளி ஆடைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு உணவு வகைகளை விற்பனை செய்யும் 450-க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்கள் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள் இக்கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.

Scroll to Top