கோலாலம்பூர், 02 நவம்பர் 2026 : டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மலேசியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (PKS) சர்வதேசச் சந்தையில் கால்பதித்து, தங்கள் வணிகத்தைப் பிராந்திய மற்றும் உலக அளவில் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, உள்ளூர் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகளை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவும், வெளிநாட்டுத் தயாரிப்புகளை மலேசியச் சந்தைக்குக் கொண்டுவரவும் வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார். தொழில்முனைவோர் நவீன தொழில்நுட்பங்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, புதிய வணிக அணுகுமுறைகளை ஆராய்வதன் மூலம் தங்களது போட்டித்திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி திருவிழா 2026 நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில்முனைவோர் சர்வதேச அளவில் தங்களது சந்தையை விரிவுபடுத்தவும் போட்டித்திறனை அதிகரிக்கவும் புதிய வணிக முறைகளைக் கையாள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷும் கலந்து கொண்டார்.
இந்திய அரசாங்கம் அந்நாட்டுத் தொழில்முனைவோர் இக்கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் முயற்சியையும் கோபிந்த் சிங் தியோ வரவேற்றார்.
இத்தகைய முயற்சிகள் வெளிநாட்டுத் தொழில்முனைவோரின் பங்கேற்பை ஊக்குவிப்பதுடன், மலேசிய வணிகர்கள் புதிய சந்தைகளைக் கண்டறியவும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தக ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், தொழில் துறைக்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவும் ஊக்கத்தொகைகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும் உதவும் எனக் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி திருவிழாவிற்கு 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பிராந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இத்திருவிழா திகழ்கிறது. 24ஆவது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா, அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தீபாவளிக் கொண்டாட்டங்களைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இன நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.







