கோலாலம்பூர், 25 அக்டோபர் 2026 : அரசுத் துறையின் டிஜிட்டல் மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைத்துவமும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான அறிவும் திறன்களும் அவசியம் என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தினார்.
புத்ராஜெயா இந்திய அரசுப் பணியாளர் சங்கமான இமையம் புத்ராஜெயம் அமைப்பைச் சேர்ந்த 60 அரசுப் பணியாளர்களுடன் இன்று நடைபெற்ற Executive Digital Leadership Programme (EDLP) நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசு அமைப்புகளின் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் தலைவர்களின் திறன்களை மேம்படுத்துவதே இம்மூன்று மாதத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிப்பதுடன், மக்களுக்கு வழங்கப்படும் பொதுச் சேவைகளின் தரத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் அரசுப் பணியாளர்கள் AWS, Cisco, IBM, Microsoft மற்றும் Shopee உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் நிபுணர்களிடமிருந்து அறிவையும் அனுபவத்தையும் பெறுவதுடன், உற்பத்தித்திறனை உயர்த்தவும், பணிச் செயல்முறைகளை எளிமைப்படுத்தவும், பொதுச் சேவைகளை மேம்படுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளையும் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
2027ஆம் ஆண்டில், EDLP திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நான்கு குழுக்களாக நடத்தப்படவுள்ளது. தகுதியுடைய அதிகாரிகளுக்கு இத்திட்டத்தின் பயிற்சிக் கட்டணத்தில் 100 விழுக்காடு முழு நிதியுதவி வழங்கப்படும்.
SSM ஊதிய முறையின்கீழ் கிரேடு 52 அல்லது SSPA முறையின்கீழ் கிரேடு 13 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள அதிகாரிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அதிகார அமைப்புகள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளைச் சேர்ந்த தகுதியான அரசுப் பணியாளர்கள் இதில் பங்கேற்கலாம்.
அரசுத் துறையைச் சேர்ந்த மேலும் பல தலைவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது டிஜிட்டல் திறன்களையும் தலைமைத்துவ ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கோபிந்த் சிங் தியோ கேட்டுக்கொண்டார்.
தொழில்நுட்ப அறிவைப் பெறுவது மட்டுமே போதாது என்றும், கற்றுக்கொண்டவற்றை நடைமுறைப்படுத்தி மக்களுக்குப் பயனளிக்கும் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை AI நாடாக உருவாக்கும் இலக்கை நோக்கி, அரசுத் துறையின் டிஜிட்டல் தலைமைத்துவத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.







