என் தமிழ்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி : அமைச்சரவைக்கு டாக்டர் மணிவண்ணன் கோரிக்கை

கோலாலம்பூர், 22 அக்டோபர் 2026 : நேபாளம்–திபெத் வெள்ளப் பேரிடரில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் மனிதாபிமான நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சினைகளை ஒருங்கிணைத்துத் தீர்க்க தேசிய ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மலேசியா சொலிடாரிட்டி ஃபேமிலீஸ் இன் ஹோப் (MASFIH) அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் தொடர்பாக, அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அவர் வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் கோரிக்கை அனுப்பியுள்ளார். சில அமைச்சர்கள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நிதி அமைச்சர் II டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸானை தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்து, நிதி அமைச்சின் தலைமையில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், சேமநிதி (EPF) உள்ளிட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும்.

இரண்டாவதாக, மாயமானவர்களின் குடும்பங்களின் அடிப்படைச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைச் சமாளிக்க ஆறு முதல் 12 மாதங்களுக்கு உதவும் வகையில், ஒருமுறை மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பல குடும்பங்கள் தங்களின் முக்கிய வருமானம் ஈட்டுபவர்களை இழந்துள்ளதால், கடன் தவணைகள், கல்விச் செலவுகள் மற்றும் அன்றாடத் தேவைகளைச் சமாளிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

மாயமானவர்களுக்கான ஆவண நடைமுறைகள் முடிவடையும் வரை குடும்பங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால், சட்ட நடைமுறைகளுக்கு இணங்க இடைக்கால நிதியுதவியும் ஒருங்கிணைந்த ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மாயமானவர்கள் உயிரிழந்துவிட்டதாக முன்கூட்டியே கருதக்கூடாது; குடும்பங்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மாயமான 54 மலேசியர்களில் 42 பேர் இந்துக்கள், 11 பேர் முஸ்லிம்கள், ஒருவர் கிறிஸ்தவர் என MASFIH தெரிவித்துள்ளது. எனவே, இனம் மற்றும் மத வேறுபாடின்றி அனைத்துக் குடும்பங்களுக்கும் சமமான உதவி வழங்கப்பட வேண்டும் என்று அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

டாக்டர் மணிவண்ணனின் தங்கை கோமதி ரெத்தினமும் மாயமானவர்களில் ஒருவர். “குடும்பங்கள் இந்தத் துயரத்தின் நிதிச்சுமையைத் தனியாகச் சுமக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. தெளிவான தலைமைத்துவம், ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் அர்த்தமுள்ள நிதியுதவி இப்போதே தொடங்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top