என் தமிழ்

மேற்கு ஆசிய மோதலைத் தணிக்க முயற்சிகளைத் தொடரும் மலேசியா : அன்வார் இப்ராஹிம் கவலை

கோலாலம்பூர், 22 அக்டோபர் 2026 : மேற்கு ஆசியாவில் மோதல்கள் தீவிரமடைந்து வருவது குறித்து மலேசியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மோதல்கள் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் மலேசியா நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி உள்ளிட்ட பிராந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன மக்களுக்கு அமைதியும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதில் மலேசியா உறுதியாக இருப்பதாகவும், காசாவில் நடைபெறும் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதுடன், தெற்கு லெபனானில் நடத்தப்படும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுகளையும் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிற பகுதிகளில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் இதே கொள்கையின் அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (GCC) உறுப்பு நாடுகளில் பொதுமக்கள், விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சிக் குழு நடத்தும் தாக்குதல்களையும் மலேசியா கண்டிப்பதாக அவர் கூறினார்.

ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள், வழிபாட்டுப் பயணிகள் உட்பட உயிரிழந்த சம்பவம், வன்முறையின் பாதிப்புகளை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இத்தகைய தாக்குதல்களுக்குப் பொறுப்பான தரப்பினரையே மலேசியா கண்டிப்பதாகவும், நீண்டகாலமாக மோதல்களால் பாதிக்கப்பட்டு வரும் யேமன் மக்களை அதற்குப் பொறுப்பாக்கவில்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார். யேமன் மக்களுக்கும் நீடித்த அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.

வர்த்தகத்தைச் சார்ந்த நாடான மலேசியாவின் பொருளாதார நலன்களுக்கு மேற்கு ஆசியாவின் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகள் திறந்தும் பாதுகாப்பாகவும் இருப்பது மிகவும் அவசியம் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பதற்றத்தைத் தணிப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளையும் சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்துச் சுதந்திரத்தையும் மலேசியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Scroll to Top