பினாங்கு, 21 அக்டோபர் 2026 : பினாங்கு மாநிலம் பட்டர்வொர்த்தில், தீபாவளியை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் ரொக்க உதவி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. டத்தோ ஸ்ரீ ஆர். அருணாசலம் சேவை மையம் சார்பில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இத்தொண்டு முயற்சியின் 45ஆவது ஆண்டு நிகழ்ச்சி, நேற்று மக் மண்டின் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் மூலம், இனம் மற்றும் மத வேறுபாடின்றி, வசதி குறைந்த சமூகத்தைச் சேர்ந்த 500 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு பொட்டலங்கள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய உணவுக் கூடையுடன், தீபாவளி உதவித்தொகையாக RM100 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பெண்கள் மற்றும் நலத்துறையின் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் பினாங்கு மாநிலத் தலைவர் தனபாலன் நந்தகுமாரும் அழைக்கப்பட்ட விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்த நலத்திட்டத்தை 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் டத்தோ ஸ்ரீ ஆர். அருணாசலத்துக்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தது. மேலும், இத்தகைய சமூக நல முயற்சியை எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரனுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற உதவிய ஏற்பாட்டாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் மாமன்றம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து வசதி குறைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இத்தகைய முயற்சிகள், சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் வலுப்படுத்துவதுடன், பண்டிகையின் உண்மையான மகிழ்ச்சியை அனைவரிடமும் கொண்டு சேர்க்கின்றன.







