சுங்கை பட்டாணி, 19 அக்டோபர் 2026 : மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் சுங்கை பட்டாணி அருள்நிலையம் ஏற்பாட்டில், சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற 44-வது நவசக்தி நவவிழா 2026-இன் ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் நாள் நிகழ்வுகள் பக்தி மற்றும் ஆன்மிகச் சிறப்புடன் நடைபெற்றன.
அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாம் நாள் நிகழ்வில், பரதநாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்றது. நடனக் கலைஞர்களின் நேர்த்தியான அசைவுகளும் பக்தி நிறைந்த வெளிப்பாடுகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற்ற ஆறாம் நாள் நிகழ்வில், ஸ்ரீ லட்சுமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்துகொண்டு திருவிளக்கேற்றி அன்னை மகாலட்சுமியை வழிபட்டனர்.


அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற ஏழாம் நாள் நிகழ்வில், “சைவநெறி விசாரதா, சங்கரத்னா, சிவாகமரத்னா” சிவஶ்ரீ ச. லோகநாதன் குருக்கள் தலைமையில் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்திப் பாடல்களைப் பாடி வழிபட்ட பக்தர்கள், நிகழ்வை ஆன்மிக நிறைவுடன் சிறப்பித்தனர்.
பரதநாட்டியம், பூஜைகள் மற்றும் பஜனை எனத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள், நவசக்தி நவவிழாவின் ஆன்மிக மற்றும் கலைச் சிறப்பை வெளிப்படுத்தியதுடன், பக்தர்களிடையே ஒற்றுமையையும் இறைநம்பிக்கையையும் வலுப்படுத்தின.








