பினாங்கு, 18 அக்டோபர் 2026 : பினாங்கு மாநிலம், பிறை ஜாலான் பாருவில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயமும் மலேசிய இந்து தர்ம மாமன்றமும் இனைந்து நடத்திய மாநில அளவிலான இந்து சமய, அறநெறி வினாடி வினாப் போட்டி, அக்டோபர் 16ஆம் தேதி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 224 மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியைப் பிறை சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு தொடங்கி வைத்தார். நிறைவு விழாவில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஆலோசகரும் அறங்காவலருமான டத்தோ என்.எஸ். ராஜேந்திரன் மற்றும் ஆலயத் தலைவர் மேஜர் (ஓய்வு) டத்தோ எம். செகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2015ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய வகுப்புகளை நடத்தி வரும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், மாணவர்களிடையே சமய அறிவையும் அறநெறிப் பண்புகளையும் வளர்க்கும் நோக்கில் இப்போட்டியை நடத்தி வருகிறது. 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி, கொவிட்-19 காலத்தில் இணையவழியிலும் நடத்தப்பட்டது.



இப்போட்டி இரண்டு வயதுப் பிரிவுகளாக நடைபெற்றது. 7 முதல் 9 வயதுக்குட்பட்ட முதல் பிரிவில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி முதலிடத்தையும், ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன. 10 முதல் 12 வயதுக்குட்பட்ட இரண்டாவது பிரிவில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி முதலிடத்தையும், ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், பிறை தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன.
இரு பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்தச் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. நிகழ்ச்சியில் பெற்றோருக்கான வினாடி வினாப் போட்டியும் நடத்தப்பட்டது.
மேலும், இந்து சமயம் மற்றும் கல்வித் துறைகளில் சமூகச் சேவையாற்றிய டத்தோ என்.எஸ். ராஜேந்திரன், டத்தோ ராஜமாணிக்கம் மற்றும் தர்ம வர்ஷினி ராஜலெத்துமி ஆகிய மூவருக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.







