என் தமிழ்

தேசிய ஒற்றுமைத் துறை பணியாளர்களுடன் யுனேஸ்வரன் ராமராஜ் சந்திப்பு : இன, மத ஒற்றுமையை வலுப்படுத்த வலியுறுத்தல்

கோலாலம்பூர், 18 அக்டோபர் 2026 : மலேசியாவில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து, கூட்டரசுப் பிரதேச தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் (JPNIN) பணியாளர்களுடன் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, சமூக நல்லிணக்கத்தைப் பேணுதல், உணர்வுபூர்வமான பிரச்சினைகளைக் கையாளுதல் மற்றும் அடிமட்ட அளவில் ஒற்றுமை முயற்சிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.

இன, மத மற்றும் கல்வி தொடர்பான உணர்வுபூர்வமான விவகாரங்கள் குறிப்பிட்ட காலகட்டங்களில், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, சமூகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் பேசப்படுவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். கருத்து வேறுபாடுகள் இருப்பதை வெறுப்பைத் தூண்டுவதற்கோ, மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கோ காரணமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மக்களின் கருத்துகளையும் பார்வைகளையும் உருவாக்குவதில் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னிலக்கத் தளங்களின் தாக்கம் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இணையவழித் துன்புறுத்தல், வெறுப்புப் பேச்சு மற்றும் ஆத்திரமூட்டும் உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார். இதன் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து மின்னிலக்க அடையாளச் சரிபார்ப்பு முறையான e-KYC நடைமுறையை ஆராய்வதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், சமூக ஒற்றுமைக்கான முயற்சிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்காக, அண்டை வீட்டார் நல்லுறவுத் திட்டமான ருக்குன் தெத்தாங்கா (KRT) பகுதிகளில் அதிகமான சமூக நிகழ்ச்சிகள், பல்வேறு இன மக்களை ஒன்றிணைக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் மற்றும் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

சமூக ஒற்றுமைக்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்கும்போது, பெண்களின் பங்கேற்பு, பணியாளர்களிடையேயான பன்முகத்தன்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மக்கள்தொகை மாற்றங்களால் ஏற்படும் சவால்கள் ஆகியவற்றுக்கும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கிய JPNIN கூட்டரசுப் பிரதேசப் பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, இத்தகைய ஒத்துழைப்புகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top