செகாமாட், 18 அக்டோபர் 2026 : ஜோகூர் மாநிலத்தின் செகாமாட் நகரில், ‘மெஜெஸ்டிக் ஜோகூர் திருவிழா’ மற்றும் ‘தெமாசியா கலாசார விழா 2026’ ஆகியவை வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. செகாமாட் டத்தாரானில் நடைபெறவுள்ள இவ்விழாவில், கலாசாரம், உணவு, கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதில் கலந்துகொள்ள செகாமாட் மக்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவின் ஒரு பகுதியாக உணவுத் திருவிழா, சூப்பா டூப்பா நிகழ்ச்சி, பாசார் மாஜிக்கா சந்தை, மலேசிய இசைப் பாடல் போட்டி, கலாசாரக் கிராமம் மற்றும் மலாயா வரலாற்றுக் குழுவின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ‘யோக் ரோண்டா பந்தர் செகாமாட்’ நகரச் சுற்றுலா நிகழ்ச்சி, வால்டர்ஸ் பண்ணை, லாபிஸ் சன்ரைஸ் பண்ணை மற்றும் வனத்துறை சார்ந்த சுற்றுலா நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

பாரம்பரிய இரட்டையர் நடனப் போட்டி, இளம் தொழில்முனைவோரின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான விற்பனை மற்றும் கண்காட்சி, மொபைல் லெஜண்ட்ஸ் மின்னணு விளையாட்டுப் போட்டி, இசைக்குழுக்களுக்கு இடையிலான போட்டி மற்றும் சிறப்பு அழைப்புக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெறவுள்ளன.
‘ஜோகூர் வருகை ஆண்டு 2026’-ஐ முன்னிட்டு, விழாவின் முக்கிய ஈர்ப்புகளாக ஜூசி மற்றும் குபிங் ஆகிய இரண்டு சின்னங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பார்வையாளர்கள் அவற்றுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 21 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டு, ஜோகூரின் கலாசாரம், உணவு, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்குமாறு பொதுமக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.








