கோலாலம்பூர், 17 அக்டோபர் 2026 : நேபாளம்–திபெத் வெள்ளப் பேரிடரில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு ஆறு மாதங்களுக்கு வட்டி, அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லாத கடன் தவணை ஒத்திவைப்பு வழங்க வேண்டும் என மலேசியா சாலிடாரிட்டி ஃபேமிலீஸ் இன் ஹோப் (MASFIH) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய மத்திய வங்கி (BNM) சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
HSBC, Public Bank, AmBank மற்றும் Maybank ஆகிய நான்கு வங்கிகளும் வட்டி, அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லாத தவணை ஒத்திவைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளை, UOB வங்கி கடன் அட்டைகளுக்கான தவணை ஒத்திவைப்பின்போதும் வட்டி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறிய அவர், இதுகுறித்து எழுத்துப்பூர்வ விளக்கத்தையும் கோரியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்துகள் மற்றும் நிதி உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என MASFIH வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, மாயமானவர்களின் சட்டபூர்வ நிலை, அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளைப் பாதுகாத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்களைப் பெறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பு கோரியுள்ளது.







