என் தமிழ்

நாட்டின் பாதுகாப்பிற்காக மறைமுகமாகப் பணியாற்றிய ‘பாஸுகான் எஃப்’ வீரர்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் நிகழ்ச்சி – யுனேஸ்வரன் ராமராஜ் பங்கேற்பு

கோலாலம்பூர், 16 அக்டோபர் 2026 : மலேசியாவின் தேசிய பாதுகாப்பிற்காகத் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், ரகசியமாகப் பணியாற்றிய சிறப்புப் புலனாய்வுப் பிரிவான ‘பாஸுகான் எஃப்’ (Pasukan F) வீரர்களின் தியாகங்களையும் வரலாற்றையும் நினைவுகூரும் நிகழ்ச்சி, மலேசிய காவல்துறை பயிற்சி மையமான புலாபோல் (PULAPOL) வளாகத்தில் நடைபெற்றது.

‘அமைதியாகப் போராடிய வீரர்கள்; நாட்டின் பாதுகாப்பு அரண்’ (Wira Dalam Senyap, Benteng Keselamatan Negara) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த வரலாற்றுப் பதிவு நிகழ்ச்சியை யுனேஸ்வரன் ராமராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மலேசிய காவல்துறையின் துணைத் தலைமை இயக்குநர் மற்றும் புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மலேசிய அரச காவல்துறையின் (PDRM) சிறப்புப் புலனாய்வுப் பிரிவான பாஸுகான் எஃப், 1971 மார்ச் 1ஆம் தேதி வெறும் 17 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த கம்யூனிசப் பயங்கரவாதிகளைக் கண்காணித்தல், ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் முக்கியத் தகவல்களைச் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளில் இப்பிரிவு ஈடுபட்டது.

‘Hanya Yang Berani’ (துணிச்சலானவர்களுக்கு மட்டுமே) என்ற முழக்கத்துடன் செயல்பட்ட இந்தப் பிரிவு, கம்யூனிச அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியது. 1989ஆம் ஆண்டு ஹாட்யாய் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, 1995 மே 1ஆம் தேதி இப்பிரிவு கலைக்கப்பட்டது.

மலேசிய தேசிய ஆவணக் காப்பகமும், மலேசிய காவல்துறையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், பாஸுகான் எஃப் பிரிவின் வரலாற்றுடன் நேரடியாகத் தொடர்புடைய மூன்று முக்கிய நபர்களின் அனுபவங்களும் போராட்டக் கதைகளும் பகிரப்பட்டன.

அவர்களின் அனுபவங்களையும் நினைவுகளையும் மலேசிய தேசிய ஆவணக் காப்பகம் நிரந்தரமாகப் பதிவு செய்து பாதுகாக்கவுள்ளது. எதிர்காலத் தலைமுறையினர் நாட்டின் வரலாற்றையும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டவர்களின் பங்களிப்பையும் அறிந்துகொள்ள இந்த ஆவணங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி குறித்து யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவிக்கையில், வரலாறு என்பது கடந்த காலத்தை நினைவுகூர்வதற்கானது மட்டுமல்ல; அமைதியின் மதிப்பையும் தியாகத்தின் உண்மையான பொருளையும் உணர்த்துவதுடன், இன்றைய தலைமுறை அனுபவிக்கும் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த மலேசிய தேசிய ஆவணக் காப்பகம், மலேசிய காவல்துறை மற்றும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்த வரலாற்று நாயகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரைப் பணயம் வைத்து, புகழையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் பணியாற்றிய பாஸுகான் எஃப் வீரர்களின் வரலாறு, குறிப்பாக இளம் தலைமுறையினரின் நினைவுகளில் தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top