என் தமிழ்

மதானி பட்ஜெட் 2027 தாக்கல் : மக்களின் சுமைகளைக் குறைத்து, புதிய வாய்ப்புகளை உருவாக்க உறுதி – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், 09 அக்டோபர் 2026 : நாட்டின் ஐந்தாவது மதானி வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், “வானளவு உயர்ந்த இலக்குகள், மண்ணில் வேரூன்றிய வளர்ச்சி” என்ற கொள்கையுடன் நாட்டின் நிதித் திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த முறை வரவு செலவுத் திட்டத்தின் மையக் கருப்பொருளாகத் தேசிய உறுதிமொழி அமைந்துள்ளது. நாட்டின் கண்ணியத்தையும் மக்களின் மதிப்பையும் உயர்த்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பாக இது விளங்குகிறது. மதானி அரசு மக்களின் சுமைகளைக் குறைத்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்கும் அதேவேளையில், மக்கள் தங்களின் அறிவு, முயற்சி மற்றும் திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இலக்குகள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமையும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் உள்ளடக்கிய நாடாக மலேசியா தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும் என்றும், அன்புக்குரிய நாட்டின் முன்னேற்றத்திற்காக மக்கள் அனைவரும் இந்தக் கூட்டு உணர்வுடன் செயல்படுவார்கள் எனத் தாம் நம்புவதாகவும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Scroll to Top