என் தமிழ்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை – வெற்றி யாருக்கு?

தமிழ்நாடு, 08 அக்டோபர் 2026 : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை, அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் இரு தொகுதிகளிலும் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த சட்டசபை பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிகா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் 2,13,788 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதியில் 2,23,306 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Scroll to Top