கோலாலம்பூர், 05 அக்டோபர் 2026 : மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா.) 80-வது கூட்டரசுப் பிரதேச பேராளர் மாநாட்டைக் கட்சியின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சார்பில் டத்தோஸ்ரீ எம். சரவணன் தொடங்கி வைத்தார். மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வரும் ம.இ.கா., பல்வேறு சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்ட போதிலும், மக்களுக்கான தனது கடமையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்று சரவணன் தெரிவித்தார்.
அவதூறு விமர்சனங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளைச் சந்தித்தாலும், ம.இ.கா. தனது மக்கள் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், உலகம் வேகமாக டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில், சமூக ஊடகச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவற்றைத் தீவிரமாகவும் தொழில்முறையுடனும் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்கள் இன்று தகவல்களைப் பகிர்வதற்கான தளங்களாக மட்டுமின்றி, மக்களுடன் தொடர்புகொள்வதற்கும், அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவதற்கும், கட்சியின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைப்பதற்கும் முக்கிய ஊடகங்களாக விளங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, இளைய தலைமுறையினரிடம் கட்சியின் கருத்துகளையும் செய்திகளையும் கொண்டு சேர்க்கும் வகையில், சமூக ஊடகங்களில் அதிகச் செயல்பாடு, படைப்பாற்றல், தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தொழில்முறை அணுகுமுறை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சரவணன் கூறினார். டிஜிட்டல் மாற்றம் இனி ஒரு விருப்பத் தேர்வல்ல; அது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தினார்.







