கோலாலம்பூர், 02 அக்டோபர் 2026 : மலேசியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பெண்களின் தன்னம்பிக்கையை முன்னிறுத்தும் வகையில் நடைபெறவுள்ள ‘மிஸ் சாரி மலேசியா 2026’ நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.
டார்க் ட்ரீமர்ஸ் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில், சன்வே ஸ்கொயர் மாலின் முதல் தளத்தில் உள்ள பிரதான வளாகத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில், நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய இந்திய உடையான சாரியின் அழகையும் அதன் கலாசார முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பதுடன், பெண்களும் இளம் திறமையாளர்களும் தங்களின் தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மிஸ் சாரி மலேசியா 2026 நிகழ்ச்சியில் பாரம்பரிய சாரி மற்றும் ஆடை அலங்காரக் காட்சிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், கலாசாரச் செயல்பாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மேலும், தீபாவளி 2026 கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி, மலேசியாவின் கலாசாரப் பன்முகத்தன்மை, பாரம்பரியம் மற்றும் சமூக ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.










