என் தமிழ்

மலேசியாவின் இயற்கை மற்றும் தொல்லியல் பாரம்பரியக் கண்காட்சி : யுனேஸ்வரன் ராமராஜ் தொடங்கி வைத்தார்

கோலாலம்பூர், 02 அக்டோபர் 2026 : மலேசியாவின் இயற்கை மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், தேசிய அருங்காட்சியக வளாகத்தில் மலேசிய கற்குகை இயற்கைச் செல்வக் கண்காட்சியை யுனேஸ்வரன் ராமராஜ் தொடங்கி வைத்தார்.

குகைகள் மற்றும் சுண்ணாம்புக்கல் பகுதிகள் இயற்கை அழகை மட்டுமல்லாமல், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருவான வரலாற்றுச் சான்றுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். புதைபடிவங்கள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்டவை நாட்டின் வரலாறு மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சியில் பாலூட்டிகள், பறவைகள், இருவாழ்விகள், ஊர்வன, பாறைகள், புதைபடிவங்கள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், நத்தைகள் மற்றும் தாவர மாதிரிகள் உள்ளிட்ட 87 வகையான சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு, நாட்டின் இயற்கைச் செல்வங்களையும் பாரம்பரியத்தையும் அறிந்துகொள்வதுடன், இயற்கை, வரலாறு மற்றும் கலாசாரம் ஆகியவை நாட்டின் அடையாளத்தை உருவாக்குவதில் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசிய கற்குகை இயற்கைச் செல்வக் கண்காட்சி 2026 அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தேசிய அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறுகிறது.

Scroll to Top