என் தமிழ்

அமெரிக்காவில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து : டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கை

அமெரிக்கா, 02 அக்டோபர் 2026 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளதாக அத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விசா விதிமீறல்கள், குற்றச் செயல்கள், மோசடி, அமெரிக்காவுக்கு எதிரான வன்முறையை ஆதரித்தல் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விசா பெற்றவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் பின்னணியைச் சரிபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை ஒரு வரலாற்றுச் சாதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்திலும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கையின் முக்கிய மைல்கல் இது எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் குழந்தை பெற்றெடுப்பதன் மூலம் அக்குழந்தைக்குக் குடியுரிமை கிடைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பயணங்களுடன் தொடர்புடைய 2,300 விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய பயணங்கள் ‘பிறப்புச் சுற்றுலா’ (Birth Tourism) என அழைக்கப்படுகின்றன. இந்த நடைமுறையைத் தடுப்பது, டிரம்ப் நிர்வாகத்தின் விரிவான குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

இதற்கிடையில், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட விசா வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை குற்றச் செயல்கள் தொடர்பான சட்ட அமலாக்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Scroll to Top