மெலாக்கா, 19 செப்டம்பர் 2026 : JPNIN மெலாக்கா அலுவலகத்தில் பணிநிலைப் பயணத்தை முடித்த பின்னர், யுனேஸ்வரன் ராமராஜ் ஆயர் கெரோவுக்குச் சென்று மெலாக்கா மாநில ருக்குன் தெதாங்கா சமூகத்தின் (KRT) உறுப்பினர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு World Youth Foundation மண்டபத்தில் நடைபெற்றது.
சரவாக் பயணத்திற்குப் பின்னர் வாரம் முழுவதும் பணிகள் அதிகமாக இருந்தபோதிலும், KRT சமூகப் பணியாளர்களை நேரில் சந்தித்து, களத்தில் எதிர்கொள்ளப்படும் நிலவரங்களை அறிந்துகொள்ள நேரம் ஒதுக்கியதாக யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார். தேசிய ஒற்றுமைக் குறியீடு (IPNas) 2025-ன் அடிப்படையில், மெலாக்கா 0.816 புள்ளிகளைப் பெற்று, பஹாங்கிற்கு அடுத்தபடியாக நாட்டில் இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்ற மாநிலமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மதிப்பெண் வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல என்றும், சமூகங்களுடன் தொடர்ந்து நெருக்கமாகச் செயல்பட்டு வரும் KRT அமைப்புகளின் முயற்சிகளையும் பங்களிப்பையும் இது பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், KRT அமைப்புகள் இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களாக மட்டும் இல்லாமல், சமூக நடவடிக்கைகளில் முன்வந்து தலைமைப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மெலாக்கா மாநில KRT உறுப்பினர்கள் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்த தொடர்ந்து ஆற்றிவரும் பணிகளுக்கு யுனேஸ்வரன் ராமராஜ் பாராட்டு தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் KPT துணை அமைச்சர் மற்றும் ஹங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் யB ஆதம் அட்லி அவர்களும் கலந்து கொண்டார்.
ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமை முயற்சிகளை பாதுகாத்து, தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.







