கோலாலம்பூர், 09 செப்டம்பர் 2026 : இளைஞர்களின் தேவைகளை நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் கருத்தில் கொள்ளும் வகையில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்று பசுமைத் தொழில்நுட்பம் தொடர்பாக 6 முக்கிய பரிந்துரைகளை பெர்டானா ஃபெலோ முன்னாள் மாணவர் சங்கம் (PFAA) முன்வைத்துள்ளது.
யூத் எகனாமிக் ஃபோரம் (YEF) மற்றும் டிஜிட்டல் அமைச்சர் அலுவலகத்துடன் இணைந்து PFAA ஏற்பாடு செய்த மூடப்பட்ட வட்டமேசை கலந்துரையாடலில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் இதில் கலந்து கொண்டார்.
PFAA தலைவர் ஃபானிஸ்யாரா காம் போன் கூறுகையில், முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை பரிந்துரைகளின் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சகம் மற்றும் தொழில்துறை தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெறுவதும், அவை நாட்டின் வளர்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதும் கலந்துரையாடலின் நோக்கம் என்றார்.
95 விழுக்காட்டுக்கும் அதிகமான இளைஞர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருவதால், டிஜிட்டல் மற்றும் பசுமை தொழில்நுட்பச் சூழலை மேம்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்கு தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்காக, இளைஞர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தொழில்துறை மற்றும் அமைச்சகத்தின் கருத்துகளும் பெறப்படுவதாக ஃபானிஸ்யாரா தெரிவித்தார். PFAA முன்வைத்த முக்கிய டிஜிட்டல் துறை பரிந்துரைகளில், வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் ஒவ்வொரு AI பயன்பாட்டுக்கும் வரிச் சலுகை வழங்குவது ஒன்றாகும்.
மற்றொரு பரிந்துரையாக ‘Micro-Credit Stacking’ முறையின் மூலம் AI மற்றும் டிஜிட்டல் திறன்களுக்கான சிறு கல்விக் கடன்களை படிப்படியாகச் சேர்த்து, அவற்றை முதுகலைப் பட்டத்துக்கு இணையான தகுதியாக உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை நீண்டகால கல்விக் காலம் இல்லாமலேயே புதிய திறன்களை விரைவாகக் கற்றுக்கொள்ளவும், ஏற்கெனவே உள்ள திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் என PFAA தெரிவித்துள்ளது.
இந்த கொள்கை ஆவணத்தை அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள Youth Economic Forum உச்சி மாநாட்டில் பிரதமரிடம் சமர்ப்பிக்க PFAA திட்டமிட்டுள்ளது. கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த வட்டமேசை கலந்துரையாடலில் PFAA, YEF குழு உறுப்பினர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.







