கோலாலம்பூர், 09 செப்டம்பர் 2026 : மலேசியா AI நாடாகவும், உலகளாவிய சக்தியாகவும் முன்னேறுவதற்கு தொழில்நுட்பத்தின் மூலம் உண்மையான மதிப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
ZTE Global Summit and User Congress 2026 நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், AI மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பது வெறும் கருத்தாக இல்லாமல், நாட்டின் உண்மையான பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்தல், பணிச்செயல்முறைகளை மேம்படுத்துதல் மற்றும் பணியாளர்கள் அதிக மதிப்புள்ள பணிகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குதல் ஆகியவை முக்கியமானவை என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டு திறமையாளர்களை வளர்த்தல், உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துதல், அறிவு மற்றும் அறிவுசார் சொத்துகளைப் பகிர்தல், புதிய சந்தைகளுக்கான அணுகலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் அர்த்தமுள்ள ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய ஒத்துழைப்புகளின் முடிவுகள் மக்களுக்கு உண்மையான, நீடித்த மற்றும் மதிப்புமிக்க பலன்களை வழங்க வேண்டும் என்றும், AI காலகட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் சிந்தனை, முயற்சிகள் மற்றும் நாட்டின் முன்னேற்றம் அனைத்திலும் ‘மதிப்பு உருவாக்கம்’ முக்கியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.







