கோலாலம்பூர், 07 செப்டம்பர் 2026 : மலேசியாவில் தற்போதுள்ள விற்பனை மற்றும் சேவை வரி (SST) முறையில் ஜிஎஸ்டி போன்ற நடைமுறைகள் தொடர்ந்து கொண்டுவரப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கலாம் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தெரிவித்த கருத்தை, பாஸ் கட்சியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
தனது பதிவில், கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஜிஎஸ்டியை ரத்து செய்வதை முக்கிய தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்ததை சுபாஷ் சந்திரபோஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது ஜிஎஸ்டி மக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக எஸ்எஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எஸ்எஸ்டி முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஜிஎஸ்டியை ஒத்த நடைமுறைகள் குறித்து பேசப்படுவது முன்னைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி என்பது மலேசியாவுக்கு மட்டுமே உரிய வரி முறை அல்ல என்றும், உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள நுகர்வு வரி முறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். லிம் லிப் எங் குறிப்பிட்டதன்படி, 176 நாடுகள் ஜிஎஸ்டி முறையைப் பயன்படுத்துவதாகவும், மலேசியாவின் எஸ்எஸ்டி முறை சர்வதேச அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
எந்த வரி முறையை பயன்படுத்துவது என்பது அதன் பெயரை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படக் கூடாது என்றும், வெளிப்படைத்தன்மை, செயல்திறன், வரி வசூல் திறன் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களே முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்றும் சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி முறையில் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சீரமைக்க வேண்டும், வரி விகிதத்தை குறைக்க வேண்டியிருந்தால் குறைக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு வழங்க வேண்டியிருந்தால் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவு தவறாக இருந்தது எனத் தெரியவந்தால் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதே முதிர்ச்சியான அரசியல் எனவும் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.







