என் தமிழ்

மலேசிய இந்து சங்கம் : ‘அருள்துணை’ இலவச உதவி எண் சேவை அறிமுகம்

கோலாலம்பூர், 04 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து சங்கம் (MHS) சார்பில் சமூகத்தில் மனநலம், சமூக நலன் மற்றும் பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் ‘அருள்துணை — இறையருளால் உறுதுணை’ என்ற இலவச உதவி எண் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தில் உதவி தேவைப்படும் எவரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் தனிமையில் இருப்பதாக உணரக்கூடாது என்ற நோக்கத்துடன் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. அழைப்புகள் அனைத்தும் இரகசியமாகக் கையாளப்படுவதுடன், தேவைக்கேற்ப தகுந்த வழிகாட்டுதலும் தொடர்புடைய சேவைகளுக்கான பரிந்துரைகளும் வழங்கப்படும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துள்ளது.

மனநல ஆதரவுக்கு 03-7627 2941, சமூக நலன் தொடர்பான உதவிக்கு 03-7627 2942, பொதுத் தொடர்புகளுக்கு 03-7627 2943 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி எண் சேவை தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.

உதவி தேவைப்படும் மக்களை இச்சேவை சென்றடையும் வகையில், மலேசிய இந்து சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ‘அருள்துணை’ குறித்த தகவல்களை WhatsApp குழுக்கள், ஆலயங்கள், குடும்பங்கள் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாகப் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவர் பகிரும் ஒரு தகவல், உதவி தேவைப்படும் மற்றொருவருக்கு நம்பிக்கையையும் சரியான வழிகாட்டுதலையும் பெறுவதற்கான முதல் வாய்ப்பாக அமையலாம் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துள்ளது.

Scroll to Top