நேபாளம், 01 செப்டம்பர் 2026 : நேபாளத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட பெருவெள்ளத்துக்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை ஏரி உடைதல் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பாறைகள் மற்றும் சேறு-சகதியுடன் ஆற்றில் விழுந்ததே பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கலாம் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செயற்கைக்கோள் படங்களில் சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் குறிப்பிடத்தக்க புவியியல் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. மேலும், சுமார் 0.56 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பனியாற்றின் பகுதி உடைந்து பிரிந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
லாங்டாங் லிருங் பகுதியில் உடைந்த பனிப்பாறை, லெண்டே ஆறு வழியாக போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் கலந்து, பாறைகள் மற்றும் சேறு நிறைந்த சக்திவாய்ந்த வெள்ளமாக கீழ்நோக்கி பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பேரிடரின் துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.







