சுங்கை பூலோ, 24 ஆகஸ்ட் 2026 : தேசிய தினத்தை முன்னிட்டு புற்றா ஹில்ஸ், புக்கிட் ரஹ்மான் புத்ராவில் நடைபெற்ற தேசிய தின சுகாதார நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு, அப்பகுதி மக்களுடன் நேரம் செலவிட்டார். BRP 2-இல் அமைந்துள்ள புற்றா ஹில்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மக்கள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகராண்மைக் குழு உறுப்பினர் ஹரி அபு கலந்து கொண்டதுடன், புற்றா ஹில்ஸ் குடியிருப்பாளர் சங்கத் தலைவர் மரியா வோங் மற்றும் அப்பகுதி மக்களும் ரமணனை வரவேற்றனர்.
இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகள் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இனம், மதம், பின்னணி என்ற வேறுபாடுகளைத் தாண்டி அண்டை அயலார்களிடையே நல்லுறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துகின்றன என்று ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
“ஆரோக்கியமான மக்கள், வலுவான சமூகங்கள், ஒற்றுமையான நாடு” என்பதே தேசிய தினத்தின் உண்மையான உணர்வாகும் என்றும், அந்த ஒற்றுமை உணர்வை தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த மரியா வோங், புற்றா ஹில்ஸ் குடியிருப்பாளர் சங்க நிர்வாகக் குழுவினர் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் ரமணன் நன்றி தெரிவித்தார்.
மேலும், இத்தகைய சமூக ஒற்றுமை நிகழ்ச்சிகள் சுங்கை பூலோவை ஆரோக்கியமான, நல்லிணக்கமான மற்றும் ஒற்றுமை மிக்க சமூகமாக உருவாக்க உதவும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.







