என் தமிழ்

மலேசியா–பாகிஸ்தான் : சர்வதேச கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்லாமாபாத், 22 ஆகஸ்ட் 2026 : மலேசியாவும் பாகிஸ்தானும் சர்வதேச கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை (ITOP) மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளிலும் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தங்களது நாட்டு குடிமக்களை, மீதமுள்ள தண்டனையை சொந்த நாட்டில் அனுபவிக்கச் செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ் ஷெரீப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் மற்றும் பாகிஸ்தான் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் பாகிஸ்தானில் சிறையில் உள்ள மலேசிய குடிமக்களை மலேசியாவுக்கும், மலேசியாவில் சிறையில் உள்ள பாகிஸ்தான் குடிமக்களை பாகிஸ்தானுக்கும் மாற்றி, அவர்கள் மீதமுள்ள தண்டனையை தங்களது சொந்த நாட்டில் தொடர முடியும். மேலும், கைதிகள் தங்களது சொந்த நாட்டின் சமூக மற்றும் கலாசார சூழலுக்கு ஏற்ற மறுவாழ்வு திட்டங்களில் பங்கேற்கவும் இந்த நடைமுறை உதவும் என சைஃபுதீன் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நடைபெற்ற ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது. இதில் மலேசிய உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், சட்டத்துறை, சிறைத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

மேலும், இந்த ஒப்பந்தம் மலேசியாவின் சர்வதேச கைதிகள் பரிமாற்றச் சட்டம் 2012 (சட்டம் 754)-ன் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. மலேசியா–பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top