சரவாக், 22 ஆகஸ்ட் 2026 : மலேசியாவின் அனிமேஷன் மற்றும் படைப்பாற்றல் துறையை மேலும் மேம்படுத்துவதில் சரவாக் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருவதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார். Borneo Animation & Games Festival (BAGFest) போன்ற தளங்கள் மூலம் மலேசியாவின் உள்ளூர் திறமையாளர்கள் மற்றும் நிறுவனங்களை சர்வதேச தொழில்துறை வலையமைப்புகள், முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளுடன் இணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மலேசிய அனிமேஷன், கணினி விளையாட்டுகள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்கள் தற்போது சர்வதேச அளவில் பார்வையாளர்களை சென்றடைந்து வருவதாகவும், இந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துதல், மலேசியாவுக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துரிமைகளை (IP) உருவாக்குதல், உயர் திறன் கொண்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், மலேசிய நிறுவனங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் விரிவடைவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்த இலக்குகளை அடைவதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும் என்றும் கோபிந்த் சிங் தியோ குறிப்பிட்டார்.
உலகளாவிய டிஜிட்டல் படைப்பாற்றல் பொருளாதாரத்தில் மலேசியா முக்கிய இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும், நாட்டில் திறமையும் ஆற்றலும் ஏற்கனவே இருப்பதால், அவற்றை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார்.







