03 ஆகஸ்ட் 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16வது சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை ஜனநாயக செயல் கட்சி (DAP) முழுமையாக மதிப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற கட்சி தீவிரமாக செயல்படும் என்றும் அதன் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் DAP-க்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக உழைத்த வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
சென்னா தொகுதியில் கடும் போட்டிக்குப் பிறகு DAP பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தோல்வியடைந்ததையும் கட்சி ஏற்றுக்கொள்வதாகக் கூறிய கோபிந்த் சிங், பல ஆண்டுகளாக கட்சிக்கும் மக்களுக்கும் சேவையாற்றி வந்த அந்தோனி லோக், இனியும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
DAP இதற்கு முன்பும் தேர்தல் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தல் முடிவு மக்களிடமிருந்து வந்த தெளிவான செய்தியாகும் என்றார். தேர்தல் முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகளை கவனமாகக் கேட்டு, அவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மீண்டும் பெற கட்சி கடுமையாக உழைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிப்பதாகவும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் புதிய அரசை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கோபிந்த் சிங் கூறினார். புதிய அரசு பொறுப்புடன் செயல்பட்டு, எப்போதும் மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.






