என் தமிழ்

FELDA சிறப்பு பணிக்குழு அறிக்கை : இன்னும் சில மாதங்களில் வெளியீடு – பிரதமர் அன்வார்

01 ஆகஸ்ட் 2026 : ஃபெடரல் நில மேம்பாட்டு ஆணையமான (FELDA) தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழுவின் (Task Force) அறிக்கை, இன்னும் சில மாதங்களில் தயாராகி பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்று மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஜெம்போலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தாபூங் ஹாஜி (Tabung Haji) தொடர்பான அரச விசாரணை ஆணைய (RCI) அறிக்கையைப் போலவே, FELDA அறிக்கையும் தயாரானவுடன் மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்றார்.

FELDA நிர்வாகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகள், தவறான நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றைச் சீரமைப்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். FELDA ஒருகாலத்தில் தவறான நிர்வாகம் காரணமாக சுமார் 10 பில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்ததாகவும் அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

மேலும், FELDA-வின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஏழு முக்கிய முன்முயற்சிகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும், அவற்றின் முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

FELDA-வின் நிர்வாகம், கொள்கைகள் மற்றும் எதிர்கால திசையை முழுமையாக ஆய்வு செய்து, அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் குடியேற்றவாசிகளின் நலனை உறுதி செய்வதற்குமான பரிந்துரைகளை வழங்குவதற்காகவே இந்த சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Scroll to Top