சன்வே சிட்டி, 19 ஜூலை 2026 : 2026 ஐச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு நடத்தப்பட்ட “ஆசிய விளையாட்டு ஃபன் ரன்” நிகழ்வின் இறுதிக்கட்டம், மலேசிய தேசிய ஒலிம்பிக் கவுன்சில் (NOC Malaysia) ஏற்பாட்டில் கோலாலம்பூரின் சன்வே சிட்டியில் உள்ள சன்வே லகூன் தீம் பூங்காவில் வெற்றிகரமாக நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறவுள்ள 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வரவேற்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மலேசிய தேசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் டாக்டர் முகமது நொர்சா சக்காரியா, சன்வே குழுமத் தலைவர் முகமது அனுவார் தாயிப், மியான்மர் விளையாட்டுத்துறை அமைச்சர் யே மியின்ட் டுன், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் குடும்ப உறவுகள் மற்றும் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் விஸ்ஸாம் டிர்க்மானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தென்கிழக்காசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் (SEAGF) கூட்டத்துடன் இணைத்து இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டதால், தென்கிழக்காசியாவின் 11 தேசிய ஒலிம்பிக் கவுன்சில்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சர்வதேச விருந்தினர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, முன்னாள் ஆசிய விளையாட்டுப் பதக்க வீரர்கள் பலரும் பங்கேற்று ஓட்டத்தில் கலந்துகொண்டதுடன், பங்கேற்பாளர்களை ஊக்குவித்தனர். தடகளம் மற்றும் டென்பின் பந்துவீச்சு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் மலேசியாவுக்கு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த வீரர்கள் இதில் இடம்பெற்றனர்.
மேலும், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னமான “ஹோனோஹோன்” மற்றும் 2027 மலேசிய தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் புதிய சின்னமான “துவா” ஆகியவை நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய டாக்டர் நொர்சா சக்காரியா, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், ஐச்சி–நகோயா ஏற்பாட்டுக் குழு, சன்வே குழுமம், தேசிய விளையாட்டு மன்றம், தேசிய விளையாட்டு நிறுவனம், தேசிய விளையாட்டுச் சங்கங்கள், முன்னாள் பதக்க வீரர்கள், தற்போதைய தேசிய வீரர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்நோக்கி ஆசிய நாடுகளிடையே ஒற்றுமையையும் விளையாட்டு உணர்வையும் வலுப்படுத்தும் நிகழ்வாக இந்த ஃபன் ரன் அமைந்தது.






