ஷா ஆலம், 06 ஜூலை 2026 : கேனன் மார்க்கெட்டிங் மலேசியா, 2026ஆம் ஆண்டுக்கான தனது EOS திரைப்பட தயாரிப்பாளர் (EOS Filmmaker Programme) திட்டத்தில் மலேசியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களான க்வெக் ஷியோ சுவான் மற்றும் ரசைஷ்யாம் ரஷித் ஆகியோரை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், கேனனின் EOS திரைப்பட தயாரிப்பாளர் திட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ளது. உள்ளூர் திரைப்படத் துறை, உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிபுணர்களுக்கு நவீன காட்சிப்பதிவு தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திரையரங்குகள், இணையத் தளங்கள், வணிக தயாரிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் காணொளி உள்ளடக்கங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படைப்பாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் EOS R System மிரர்லெஸ் கேமராக்கள், RF லென்ஸ்கள் மற்றும் Cinema EOS தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை கேனன் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
கேனன் மார்க்கெட்டிங் மலேசியாவின் படத்தொடர்பு வணிகப் பிரிவின் தலைவர் எட்வர்ட் சாங் கூறுகையில், தொழில்நுட்பம் படைப்பாற்றலை ஊக்குவித்து, அர்த்தமுள்ள கதைகளை உலகிற்கு கொண்டு சேர்க்கும் சக்தி கொண்டது என்ற நம்பிக்கையுடன் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், க்வெக் ஷியோ சுவான் மற்றும் ரசைஷ்யாம் ரஷித் ஆகியோரின் இணைப்பு, மலேசிய திரைப்படத் துறையின் படைப்பாற்றல் மிக்க திறமைகளை வளர்க்கும் கேனனின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
க்வெக் ஷியோ சுவான் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் சினிமா பாணியால் பல்வேறு வணிக மற்றும் படைப்பாற்றல் திட்டங்களில் சிறப்பான கதையம்சங்களை உருவாக்கியவராக அறியப்படுகிறார். அதேவேளையில், ரசைஷ்யாம் ரஷித் பல்வேறு வடிவங்களில் இயல்பான கதைகளை உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட திரைப்பட இயக்குநராக துறையில் தனித்துவமான அங்கீகாரம் பெற்றுள்ளார்.
EOS திரைப்பட தயாரிப்பாளர் திட்டத்தின் மூலம், திரைப்படத் துறையினரிடையே அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதோடு, தொழில்நுட்பத்தின் உதவியுடன் தரமான காட்சிக்கதைகளை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பையும் கேனன் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம், மலேசிய திரைப்பட மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிட தேவையான தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் ஊக்கத்தை வழங்கும் கேனனின் நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாகும்.






