ஜோகூர், 09 ஜூலை 2026 : ஜோகூரின் பெக்கோக் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டேய் யோக் ஜியுவென் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட டிஏபி தேசியத் தலைவரும் டிஜிட்டல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ, அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் நல்லாட்சிக்கான பக்காத்தான் ஹராப்பானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

அப்போது உரையாற்றிய அவர், அமைதியான, வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மலேசியாவை உருவாக்குவது பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய இலக்காகும் என்றார். அதற்காக முன்னெடுக்கப்படும் முக்கிய அரசியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக, பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைகளுக்கு மட்டுப்படுத்தும் திட்டம் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சீர்திருத்தம், பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் திறன்மிக்க நிர்வாகத்தை உறுதி செய்வதோடு, நாட்டின் ஜனநாயக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மக்களின் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக கூறிய கோபிந்த் சிங் டியோ, வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தல் சிறந்த தலைமையையும் முன்னேற்றத்தையும் தேர்ந்தெடுக்கும் முக்கிய வாய்ப்பாகும் என்றார்.
ஜோகூரின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மக்களின் நலனை உறுதி செய்ய, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வாக்களிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும், கூட்டாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ஜோகூரை வளர்ச்சி மற்றும் வளத்தின் புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.






