என் தமிழ்

‘TASTE OF BORNEO’ விழா : மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது

சரவாக், 05 ஜூலை 2026 : ‘டேஸ்ட் ஆஃப் போர்னியோ கலாச்சாரத் திருவிழா’ (TOBC) 4.0, ஒரே அணிவகுப்பில் அதிக இனக் குழுக்களின் பங்கேற்பு’ என்ற பிரிவில் மலேசிய சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மிரியில் உள்ள பவுல்வர்டு திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், சரவாக் முதலமைச்சர் அபாங் அப்துல் ரஹ்மான் ஜோஹரி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது இந்த அங்கீகாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

திருவிழாவின் முக்கிய அம்சமாக இடம்பெற்ற கலாச்சார அணிவகுப்பில், போர்னியோவைச் சேர்ந்த பல்வேறு இனக் குழுக்கள் பாரம்பரிய உடைகள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் தங்களது கலாச்சார சிறப்புகளை வெளிப்படுத்தினர். இந்த அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையிலான இனக் குழுக்கள் பங்கேற்றதற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இவ்விழா இடம்பெற்றது.

இந்த ஆண்டைய திருவிழாவில் சபா, புருனே, இந்தோனேசியா மற்றும் சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்த கலைக்குழுக்களும் பங்கேற்று, கலாச்சார பரிமாற்றத்தையும் சர்வதேச நட்புறவையும் வலுப்படுத்தின.

மேலும், பல்வேறு இன அமைப்புகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுடன், மிரி நகர மன்றத்திற்கும் சீனாவின் லிஜியாங் நகராட்சி மக்கள் அரசாங்கத்திற்கும் இடையே நட்பு நகர ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Scroll to Top