என் தமிழ்

மலேசியா–ஆஸ்திரேலியா பாதுகாப்பு உறவு : ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர்கள் ஆலோசனை

02 ஜூலை 2026 : மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின், ஆஸ்திரேலியாவுக்கான தனது பணிப் பயணத்தின் போது அந்நாட்டின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த மே மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா உரையாடல் (Shangri-La Dialogue) மாநாட்டின் போது நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல், இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையில் நெருக்கமான உறவை மேலும் விரிவுபடுத்தும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சந்திப்பின்போது, மலேசியா–ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் புதிய மூலோபாய கூட்டுறவு வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வெஸ்ட்ஸ்டார் டிஃபென்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செண்டிரியான் பெர்ஹாட் (Weststar Defence Industries Sdn. Bhd.) மற்றும் ராக்கெட் டெக்னாலஜிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (Rocket Technologies International Pty Ltd – RTI) ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு மலேசியா தனது நன்றியையும் தெரிவித்தது.

மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவு, இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதோடு, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர்.

Scroll to Top